அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சீனா மற்றும் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக வரும் ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்திக்க உள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியானவுடன் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டன, அதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17 சதவீதம் வரை சரிந்தது.

இது இந்தியாவிற்குப் பெரும் சாதகமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இந்த நிம்மதி சில மணி நேரங்கள் கூட நீடிக்கவில்லை என்பதுதான் தற்போதைய பகீர் தகவல்.

போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களிலேயே, ஈரானின் லாவன் (Lavan Island) தீவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு தீப்பிழம்புகள் வானை முட்டும் அளவுக்கு எழுகின்றன. ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை என்று கூறிக்கொண்டே, மறுபுறம் தாக்குதல்கள் தொடர்வது இது வெறும் கண்துடைப்பு நாடகமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும், “இந்தப் பேச்சுவார்த்தை என்பது போர் முடிந்துவிட்டதாக அர்த்தமல்ல” என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், ஈரானுக்கு ஆயுத உதவி செய்யும் நாடுகளுக்கு 50 சதவீத வரி விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்துள்ளது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. இதனால் வரும் வெள்ளிக்கிழமை நடக்கும் கூட்டம் தோல்வியடைந்தால், போர் இன்னும் கோரமான முகத்தை எடுக்கும் என உலகம் அஞ்சுகிறது.