ஈரான் மீதான தாக்குதல் மிரட்டல்களைத் தொடர்ந்து, தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென பின்வாங்கியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதியின் கோரிக்கையை ஏற்று, ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்விடங்களை அழிக்கப்போவதாக ஏற்கனவே டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

ஈரானின் ‘ஹார்முஸ்’ ஜலசந்தியை முழுமையாகத் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் மாற்றத்தைக் கண்டு சமூக வலைதளங்களில் மக்கள் டிரம்பை ‘TACO’ (Trump Always Chickens Out) என்று கடுமையாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதாவது, டிரம்ப் முதலில் பெரிய அளவில் மிரட்டல் விடுப்பதும், பின்னர் பயந்துபோய் பின்வாங்குவதும் அவருக்கு வழக்கமாகிவிட்டது என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.

2025-ம் ஆண்டிலிருந்தே டிரம்பின் இத்தகைய செயல்பாடுகளைக் குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஈரானின் 10 அம்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள டிரம்ப், அடுத்த இரண்டு வாரங்களில் நிரந்தரத் தீர்வு எட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.