ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து விசான்பேட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், பயணச்சீட்டு எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் நடத்துனரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங் நகர் பேருந்து நிலையத்தில் ஏறிய இரு பெண்களிடம் நடத்துனர் சீனிவாச ராவ் பயணச்சீட்டு கேட்க, அவர்களில் ஒரு பெண் மூன்று ஆதார் அட்டைகளைக் காட்டியுள்ளார்.
மேலும் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யும் போது எதற்காக மூன்று அட்டைகளைக் காட்டுகிறீர்கள் என்று நடத்துனர் கேள்வி எழுப்பியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அனைவரது முன்னிலையிலும் நடத்துனரின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.
இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த நடத்துனர், பேருந்தை உடனடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அங்கு நடத்துனர் அந்தப் பெண் மீது புகார் அளித்தார். அதே வேளையில், நடத்துனர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாலேயே தான் அவரைத் தாக்கியதாக அந்தப் பெண்ணும் பதில் புகார் அளித்துள்ளார்.
இந்த மோதல் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், உண்மை நிலையை அறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசுப் பணியில் இருந்த ஊழியர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அப்பகுதியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
