கேரள சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக வயதுடையவர்களின் பட்டியலில், முதலமைச்சர் பினராயி விஜயன் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது 82 வயதாகும் அவர், கண்ணூர் மாவட்டத்தின் தர்மடம் தொகுதியில் இடதுசாரி முன்னணி சார்பில் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். சுமார் 60 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட பினராயி விஜயன், வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே என்பதைத் தனது சுறுசுறுப்பான தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் நிரூபித்து வருகிறார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடும் 883 வேட்பாளர்களில், 10 பேர் 76 வயதைக் கடந்த மூத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பினராயி விஜயனைத் தொடர்ந்து, மூத்த வேட்பாளர்கள் பட்டியலில் 81 வயதான அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் கண்ணூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் அவருக்கு அடுத்தபடியாக 80 வயதான அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். தனது சொந்த தொகுதியில் மட்டுமல்லாமல், கேரளா முழுவதும் இடதுசாரி வேட்பாளர்களுக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பினராயி விஜயனின் அரசியல் ஆர்வம், இளம் தலைமுறை வேட்பாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.