வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மாரியலி சாகோன் என்ற தாய், நடுக்கடலில் தத்தளித்த தனது இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற தனது உயிரையே தியாகம் செய்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிங்குரோட் பகுதியில் இருந்து டோர்டுகா தீவிற்கு தனது குடும்பத்தினருடன் படகில் சென்றபோது, ராட்சத அலையினால் படகு உடைந்து விபத்துக்குள்ளானது.

இதில் மாரியலி சாகோன் தனது ஆறு வயது மகன் மற்றும் இரண்டு வயது மகளுடன் ஒரு சிறிய உயிர் காக்கும் படகில் தப்பினார். ஆனால் உணவு மற்றும் தண்ணீர் ஏதுமின்றி நான்கு நாட்களாகக் கடலின் நடுவே அவர்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.

கடுமையான வெயிலில் பிஞ்சுக் குழந்தைகள் நீர்ச்சத்து குறைபாட்டால் உயிருக்கு போராடுவதைக் கண்ட அந்தத் தாய், தன் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்து அவர்கள் உயிரைக் காத்துள்ளார். தனக்குத் தாய்ப்பால் சுரக்க வேண்டும் என்பதற்காகத் தனது சொந்தச் சிறுநீரையே குடித்துக் கொண்டு மூன்று நாட்களாகப் பசியும் தாகமும் இன்றி அந்தத் தாய் போராடியுள்ளார்.

இறுதியில் மீட்புக் குழுவினர் அந்தப் படகைக் கண்டறிவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, உடலில் நீர்ச்சத்து மற்றும் சத்துக்கள் முற்றிலும் தீர்ந்துபோன நிலையில் அந்தத் தாய் உயிரிழந்தார். தனது இன்னுயிரைத் தந்து பிள்ளைகளை மீட்ட அந்தத் தாயின் தியாகம் உலகெங்கிலும் உள்ள மக்களைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.