புனே மாவட்டம் சிரூர் வட்டத்தில் உள்ள பாம்பர்டே கிராமத்தில் பெற்ற தாயே தனது 11 மாத குழந்தையை படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரவீந்திர பவார் என்பவரின் மனைவி பூஜா பவார், தனது மகன் யஷ் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்துள்ளார்.

ஏற்கெனவே குடும்பத்தில் நிலவிய மனக்கசப்பு மற்றும் தனது இரண்டாவது திருமணத்திற்கு குழந்தை தடையாக இருப்பான் என்று கருதிய அந்த பெண், மனிதாபிமானமற்ற முறையில் குழந்தையை சிமெண்ட் திண்ணையில் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தடையயங்களை மறைக்க வீட்டில் சிந்திய ரத்தக் கறைகளைக் கழுவிச் சுத்தம் செய்துவிட்டு, குழந்தையின் உடலை ஒரு துணிப்பையில் வைத்து அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் வீசியுள்ளார்.

குழந்தையைக் காணவில்லை என்று தந்தை ரவீந்திர பவார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் தாயிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், இறுதியில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கிணற்றில் வீசப்பட்ட குழந்தையின் உடல் பையுடன் மீட்கப்பட்டதுடன், உடலை மறைக்க அந்தப் பெண் பையினுள் கற்களை வைத்து மூழ்கடித்ததும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், காவல்துறையினர் அந்தப் பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.