பெங்களூரு பொம்மசந்திரா அருகே உள்ள யாரண்டஹள்ளி பகுதியில் மாயமான கட்டுமானத் தொழிலாளி சுனில் நாயக் என்பவர், ஒரு மதுபான விடுதிக்கு அருகில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கடந்த மார்ச் 25ம் தேதி மதிய உணவிற்குப் பிறகு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
கணவரைக் காணவில்லை என்று அவரது மனைவி புஷ்பா மற்றும் வீட்டு உரிமையாளர் தேடியபோது, அங்குள்ள காலி இடத்தில் ஒரு சாக்குப்பையில் சுனில் நாயக் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
சுனில் நாயக்கின் கழுத்து அறுக்கப்பட்டுக் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. காவல்துறையினரின் தீவிர விசாரணையில், சுனில் நாயக் கடைசியாக அவரது நண்பரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாசுதேவ் மல்லிக் என்பவருடன் மது அருந்தியது தெரியவந்தது.
இதனடிப்படையில் பாசுதேவை கைது செய்து விசாரித்தபோது, அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். சுனில் நாயக்கின் மனைவி மீது கொண்ட தகாத ஆசையினால், அவருக்குத் தடையாக இருந்த கணவரைக் கொல்லத் திட்டமிட்டதாகக் கூறியுள்ளார்.
மது அருந்திவிட்டு மயக்கத்திலிருந்த சுனில் நாயக்கை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, உடலை சாக்குப்பையில் கட்டி மறைக்க முயன்றபோது மக்கள் நடமாட்டம் இருந்ததால் அங்கேயே போட்டுவிட்டுத் தப்பியுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
