கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில், 20 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்த 62 வயது முதியவர் ஒருவர், மூன்று நாட்களாக உணவின்றி உயிருக்கு போராடிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுப்பியைச் சேர்ந்த சீனிவாச ஆச்சார்யா என்பவர் கடந்த 4-ம் தேதி தனது வீட்டின் முன்புள்ள கிணற்றைச் சுத்தம் செய்தபோது நிலைதடுமாறி உள்ளே விழுந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த மோட்டார் பம்புசெட் மற்றும் கயிற்றைப் பிடித்துக்கொண்டு கிணற்றுக்குள்ளேயே தவித்த அவரை, ஆள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் தெரியவில்லை.

நேற்று காலை அவரது வீட்டிற்குச் சிலிண்டர் கேட்க வந்த நண்பர் கணேஷ், கிணற்றுக்குள் முதியவர் உயிருக்குப் போராடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி இறங்கி, 3 நாட்களாகப் பட்டினியுடன் மரணத்தின் விளிம்பில் இருந்த முதியவரைப் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.