கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் செந்தில் பாலாஜி, தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கரூரிலிருந்து ஆட்களை வரவழைத்து தேர்தல் வேலை பார்ப்பதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறிய குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
கோவையில் உள்ள ஒவ்வொரு திமுக நிர்வாகியும், கூட்டணி கட்சித் தோழர்களும் கழகச் சிப்பாய்கள் போலத் திறம்படப் பணியாற்றி வருவதாகவும், வெற்றியைத் தேடித்தர அவர்கள் தயாராக இருப்பதால் வெளியூரிலிருந்து ஆட்களை இறக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,அதிமுக வேட்பாளரும் இந்தத் தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்றும், தன்னைப்போலவே அவரும் வெளியூர்க்காரர் தான் என்றும் குறிப்பிட்டார். அதிமுக வேட்பாளர் தொகுதிக்கு ஏதாவது நல்லது செய்திருந்தால் அதைச் சொல்லி வாக்கு கேட்கட்டும் என்று சவால் விடுத்த செந்தில் பாலாஜி, தான் அமைச்சராக இருந்தபோது சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தத் தொகுதியில் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
