“திமுக என்பது தனது கூட்டணிக் கட்சிகளையே அடிக்கடி காலை வாரும் கட்சி. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியின் நிதி நிலைமை முற்றிலுமாக சுரண்டப்படும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். புதுச்சேரியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
புதுச்சேரி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான ‘தனி மாநில அந்தஸ்து’ பெறுவதற்கு அதிமுக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கும். இதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களையும், முயற்சிகளையும் அதிமுக முன்னெடுக்கும். திமுக ஆட்சியில் ஊழல் என்பது தரைமட்டத்திலிருந்து விண்வெளி வரை நீண்டுள்ளது. கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் கூட ஊழல் செய்த பெருமை திமுகவையே சாரும். தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் கொள்ளையடிக்க திமுக முயற்சிக்கிறது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியின் கருவூலம் காலியாகிவிடும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு சுயநலவாதி. மக்கள் நலனை விடத் தனது குடும்ப நலனுக்கே முக்கியத்துவம் கொடுப்பவர். அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப அடிக்கடி தனது கொள்கைகளையும் முடிவுகளையும் மாற்றிக் கொள்பவர். திமுகவிற்கு தமிழ்நாட்டில் ஒரு கொள்கை, புதுச்சேரியில் வேறு ஒரு கொள்கை என இரட்டை வேடம் போடுகின்றனர்.
தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, புதுச்சேரி மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும். புதுச்சேரி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், புதுச்சேரியின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தத் தேவையான நிதியை மத்திய அரசிடம் பேசி அதிமுக பெற்றுத் தரும்.
கொரோனா பேரிடர் காலத்தில் இந்திய மக்களைக் காப்பாற்றியது மட்டுமின்றி, வெளிநாட்டு மக்களுக்கும் தடுப்பூசி வழங்கி உயிர்காத்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியையே சாரும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
