“திருமண வாழ்க்கையில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் சாதாரணமானவை; இதற்காகத் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு வாழ்க்கைத் துணையைக் குற்றம் சொல்ல முடியாது” என மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியைச் சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஆசிரியை ஒருவரின் கணவர், கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்பப் பிரச்சினை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாகக் கணவரின் குடும்பத்தினர் அளித்த புகாரில், “ஆசிரியை தனது கணவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் துன்புறுத்தினார். மேலும் அவருக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்தது” எனக் குற்றம் சாட்டியிருந்தனர். இதன் அடிப்படையில், தற்கொலைக்குத் தூண்டியதாக அந்த ஆசிரியை மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தனது மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த ஆசிரியை மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “எனது கணவரும் அவரது குடும்பத்தினருமே என்னைச் சித்ரவதை செய்து வந்தனர்; பொய்யான புகாரின் அடிப்படையில் என் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது, இல்லற வாழ்க்கையில் கணவன் – மனைவி இடையே முரண்பாடுகள் ஏற்படுவது வழக்கம்.
ஒருவரையொருவர் தவறாக நடத்துவதும், கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டுவதும் திருமண வாழ்வில் சகஜமான ஒன்றே. பெண்ணின் செயலால் கணவர் விரக்தியில் இருந்திருக்கலாம். ஆனால், இதற்காகத் தற்கொலை செய்துகொண்டால் அதற்கு அந்தப் பெண் தான் காரணம் எனக் கூற முடியாது. மேலும், உயிரிழந்த நபர் எழுதிய தற்கொலைக் கடிதத்தில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். கோபத்தில் பேசப்படும் வார்த்தைகள் தற்கொலைக்குத் தூண்டிய குற்றமாக ஒருபோதும் கருதப்படாது. எனவே, மனுதாரர் மீதான இந்த வழக்கை ரத்து செய்கிறோம் என்றனர். மேலும் குடும்பப் பிரச்சினைகளில் தற்கொலைக்குத் தூண்டியதாகப் பதியப்படும் வழக்குகளில், இந்தத் தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
