உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் ஒருவன் மனைவியால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சைலேந்திரா என்பவரின் மனைவிக்கு மற்றொரு நபருடன் சட்டவிரோத தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவனுக்குத் தெரியவந்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
மேலும் தனது கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த மனைவி, தனது காதலனுடன் இணைந்து ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினார். சம்பவத்தன்று இரவு கணவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து இருவரும் சேர்ந்து சைலேந்திராவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.
இந்தக் கொடூரச் செயலைச் செய்த பிறகு, போலீஸாரை திசைதிருப்ப அந்தப் பெண் பல்வேறு நாடகங்களை ஆடினார். இருப்பினும், சைலேந்திராவின் மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் மனைவியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, அவர் தனது காதலனுடன் தொடர்ந்து பேசியது அம்பலமானது.
இதனால் போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். தற்போது அந்தப் பெண் மற்றும் அவரது காதலன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
