“என் உடலில் தெம்பு இருக்கும் வரை மக்களுக்காக இதே இடத்தில் நின்று கத்துவேன்; அடிமையாக வாழ்வதை விடப் போரிட்டு மடிவதே மேல்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரம்பலூரில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துச் சீமான் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது, நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டால் போடுங்கள், இல்லாவிட்டால் போங்கள். என்னால் யாரிடமும் பணத்திற்கோ அல்லது சீட்டிற்கோ கையேந்தி நிற்க முடியாது. யாரிடமும் சரணடைந்து வாழ்வதை விட, மக்களுக்காகச் சண்டையிட்டுச் சாவதே மேல் என நான் கருதுகிறேன்.

இந்த முறை ஒன்று நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள், இல்லையென்றால் எனக்கு ‘வாய்க்கரிசி’ போட்டுவிடுங்கள். நான் பேசுவது உங்களுக்காகத்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாவிட்டால், இந்த மக்களை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு சீமான் மிகவும் விரக்தியுடனும், ஆவேசத்துடனும் பேசினார்.

மேலும் சீமானின் இந்த ‘வாய்க்கரிசி’ பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில், மற்ற கட்சிகள் கூட்டணி மற்றும் வாக்குறுதிகளை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், சீமான் தனது வழக்கமான பாணியில் உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தி வருகிறார்.