அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில், சக மாணவி ஒருவரைத் தாக்கி உயிரிழக்கச் செய்த விவகாரத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, கிம்பர்லி சவலெட்டா என்ற 12 வயது சிறுமி தனது சகோதரியை ஒரு கும்பல் கேலி செய்தபோது தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு மாணவன், கிம்பர்லியின் தலையில் இரும்புத் தண்ணீர் பாட்டிலால் பலமாகத் தாக்கியுள்ளான். இதில் படுகாயமடைந்த கிம்பர்லி, மூளையில் ஏற்பட்ட ரத்தப்போக்கு காரணமாகச் சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 25-ஆம் தேதி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், தற்போது அந்தச் சிறுவனைக் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இந்தச் சோகமான சம்பவத்திற்குப் பள்ளியின் மெத்தனப் போக்கே காரணம் என்று கிம்பர்லியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிம்பர்லியும் அவரது சகோதரியும் பல மாதங்களாகத் தொடர்ந்து மற்ற மாணவர்களால் துன்புறுத்தப்பட்டு வந்ததாகவும், இது குறித்துப் பள்ளி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கிம்பர்லி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஒரு மாணவனை மட்டும் கைது செய்வதால் நீதி கிடைத்துவிடாது என்றும், குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறிய பள்ளி நிர்வாகம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்காவில் சமீபகாலமாகப் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.