காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள எம்.பி. ஜோதிமணி, நீண்ட காலம் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, புதிதாக வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையாக உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகம் மற்றும் விளிம்புநிலை சமூகமான அருந்ததியர் சமூகத்திற்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இது ராகுல் காந்தியின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என்றும், கட்சித் தலைமை தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸில் பணியாற்றிய தனக்கு, தற்போது கட்சி அந்நியமாகத் தெரிவதாகவும், தகுதியான பலருக்கு சீட் வழங்கப்படாதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாகவும் ஜோதிமணி கூறியுள்ளார்.

தேர்தல் முடியும் வரை அமைதி காக்கப்போவதாகத் தெரிவித்துள்ள அவர், 60 ஆண்டுகளாகக் கட்சியைத் தாங்கிப் பிடிக்கும் தொண்டர்களுக்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் ஜனநாயகத் தன்மையை இழந்து வருவதாகவும், இந்த வேட்பாளர் பட்டியலை எதிர்க்க ஒவ்வொரு தொண்டருக்கும் உரிமை உண்டு என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.