பாகிஸ்தானின் பொருளாதாரத் தலைநகரான கராச்சியில், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த கிருஷ்ணர் மற்றும் கோபியர் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் அந்நாட்டு இந்துக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கராச்சியில் 1937-ஆம் ஆண்டு, அதாவது சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சகன் மேசன்’  என்ற கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தில் பழமை வாய்ந்த கிருஷ்ணர் மற்றும் கோபியர் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தக் கட்டடத்திற்குள் புகுந்த சமூக விரோதிகள், அங்கிருந்த சிலைகளை அடித்து உடைத்துச் சிதைத்துள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலுக்கு ‘பாகிஸ்தான் தர்பார் இத்தேஹாத்’ அமைப்பின் தலைவர் சிவ கச்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கராச்சியில் உள்ள வரலாற்றுச் சின்னத்தில் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது வெறும் சிலைகளைச் சேதப்படுத்தும் செயலல்ல; பாகிஸ்தானின் பன்முக கலாச்சாரம், மத நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினரின் உணர்வுகள் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்தச் செயலால் இந்து சமூகம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளது.

குற்றவாளிகளைத் தாமதமின்றி கைது செய்து அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என சிவ கச்சி வலியுறுத்தியுள்ளார். மேலும், சேதமடைந்த சிலைகளை மீண்டும் நிறுவி, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தொன்மையான கட்டடத்தைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சிலைகள் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.