கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் வரை குறைக்கப்பட்டிருப்பது அந்த நாட்டு மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் நிலவி வரும் அசாதாரண சூழல் மற்றும் உலகளாவிய போர் எதிரொலி காரணமாக, எரிபொருள் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்திருந்தன. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு திணறி வந்தது.

மக்களின் கொந்தளிப்பைத் தணிக்கும் வகையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 80 ரூபாய் குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்த அதிரடி மாற்றத்திற்குப் பிறகு, பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது 378 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைக் குறைப்பு மட்டுமன்றி, சாமானிய மக்களுக்கு மேலும் உதவும் வகையில் புதிய மானியத் திட்டத்தையும் அந்நாட்டு நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன்படி மாதம் 20 லிட்டர் பெட்ரோல் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு, லிட்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும். இந்தத் திட்டம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு குறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், “எரிபொருள் விலை உயர்வால் திணறி வரும் பாகிஸ்தான் மக்களுக்கு இது ஒரு சிறிய ஆனால் முக்கியமான நிவாரணமாக அமையும். நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த விலைக் குறைப்பு நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்ற கேள்வி அந்நாட்டு பொருளாதார வல்லுநர்களிடையே எழுந்துள்ளது.