உலகெங்கும் உள்ள குழந்தைகள் பொம்மைகளைக் கொண்டு விளையாடுவதையும், சிரித்துப் பேசி மகிழ்வதையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், போர் மேகங்கள் சூழ்ந்துள்ள காசாவில் உள்ள குழந்தைகள் விளையாடும் ஒரு ‘விளையாட்டு’ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களின் இதயத்தை ரணமாக்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், சில சிறுவர்கள் ஒரு பொம்மையை பாடையில் வைத்துத் தங்கள் தோள்களில் சுமந்து செல்கின்றனர். இது பார்ப்பதற்கு ஏதோ ஒரு இறுதிச்சடங்கு ஊர்வலம் போலவே இருக்கிறது. தங்கள் கண்முன்னே தினமும் நடக்கும் உயிரிழப்புகளையும், இறுதிச்சடங்குகளையும் பார்த்த அந்தப் பிஞ்சுக் குழந்தைகள், அதையே ஒரு விளையாட்டாக மாற்றிச் செய்து காட்டுகின்றனர்.
View this post on Instagram
இந்த வீடியோ காசாவில் உள்ள ஒரு நிவாரண முகாமில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த உளவியல் நிபுணர்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். இது “அதிர்ச்சி விளையாட்டு” என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் தங்கள் மனதில் ஏற்படும் பயம், பதற்றம் மற்றும் பார்த்த கொடூரமான சம்பவங்களைத் தாங்களாகவே புரிந்துகொள்ளவும், அந்த வலியைக் கையாளவும் இத்தகைய விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள் என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.
இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள் தங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “இது மிகவும் சோகமானது, நெஞ்சை உடைக்கும் காட்சி” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். இந்தக் குழந்தைகளுக்காக உலகம் தோற்றுவிட்டது என்று மற்றொருவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிஞ்சுக் குழந்தைகளின் கண்கள் பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்துவிட்டன எனப் பலரும் கண்ணீருடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்கள் மழலைப் பருவத்தில் விளையாடி மகிழ வேண்டிய வயதில், மரணத்தை ஒரு விளையாட்டாகச் செய்யும் இந்தக் குழந்தைகளின் நிலை, போரின் கோரத்தை உலகுக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
