மேற்கு ஆசியப் போர் முனையில் ஈரான் தனது அதிரடித் தாக்குதல்களால் அமெரிக்காவிற்கு ஈடுசெய்ய முடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது.
“புனித வெள்ளி”யை அமெரிக்காவிற்கு ஒரு “கறுப்பு வெள்ளி”யாக மாற்றியுள்ளதாக அறிவித்துள்ள ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவின் இரண்டு அதிநவீன போர் விமானங்கள் மற்றும் பல ஆளில்லா ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் எஃப்-15 (F-15) மற்றும் ஏ-10 (A-10) ரக விமானங்கள் மட்டுமின்றி, எம்.கியூ-9 (MQ-9) ரக ட்ரோன்களும் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈரான் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 48 மணி நேரத்திற்குள், அமெரிக்காவிற்கு இத்தகைய பேரிடியை ஈரான் கொடுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட எஃப்-15 விமானத்தின் விமானியைத் தேடிச் சென்ற ஏ-10 வார்ஹாக் (A-10 Warhawk) விமானத்தையும் ஈரானியப் படைகள் குறிவைத்துத் தாக்கியுள்ளன.
இந்தத் தாக்குதலில் இருந்து தப்பி குவைத் வான் எல்லைக்குள் நுழைந்த அந்த விமானம் அங்கேயே விபத்துக்குள்ளானது; நல்லவேளையாக அதன் விமானி உயிர் தப்பினார். இதுமட்டுமின்றி, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பிளாக்ஹாக் (Blackhawk) ஹெலிகாப்டர்களையும் ஈரான் ஏவுகணைகள் துரத்தித் தாக்கியதில் அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் வான் அதிகாரத்திற்கு ஈரான் விடுத்துள்ள இந்தச் சவால், இரு நாடுகளுக்கும் இடையிலான போரை மிக அபாயகரமான கட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.
