அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காப்புரிமை பெற்ற (Patented) மருந்துகளுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.
அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை உள்நாட்டிலேயே பெருக்க வேண்டும் என்பதற்காகவும், மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும் இந்த ‘டேரிஃப்’ அதிரடியை அவர் கையில் எடுத்துள்ளார். இந்த அறிவிப்பு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், இந்தியாவுக்கு இப்போதைக்கு ஒரு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.
அதாவது, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் மருந்துகளில் 90 சதவீதம் ‘ஜெனரிக்’ (Generic) வகை மருந்துகள் என்பதால், அவற்றுக்கு இந்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு உடனடி பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் ஜெனரிக் மருந்துகளுக்கும் டிரம்ப் குறி வைப்பாரோ என்ற அச்சம் நிபுணர்களிடையே எழுந்துள்ளது.
ஒருவேளை அப்படி நடந்தால், இந்திய மருந்து சந்தைக்கு அது பெரும் சவாலாக அமையும். ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளும் இந்த வரி விதிப்பால் கலக்கத்தில் உள்ள நிலையில், உலக வர்த்தகத்தில் இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
