மசூறு வீக்கம் மற்றும் பல் வலி காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக பல் மருத்துவரிடம் சென்ற ‘டெவன் வேன்டர்பூல்’ என்ற இளைஞருக்கு நேர்ந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகையுமே அதிர வைத்துள்ளது.
பல் கிளினிக்கிற்குச் சென்று திரும்பிய சில நிமிடங்களிலேயே அவருக்குக் கடும் குளிர் மற்றும் நடுக்கம் ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ‘செப்டிக் ஷாக்’ (Septic Shock) எனும் அபாயகரமான நிலைக்குச் சென்றதைக் கண்டு அதிர்ந்தனர்.
அவரது மசூறுகளில் ஏற்பட்ட ரத்தக்கசிவு வழியாக உள்ளே நுழைந்த பாக்டீரியாக்கள், ரத்தம் மூலம் உடல் முழுவதும் பரவி அவரது முக்கிய உறுப்புகளைச் செயலிழக்கச் செய்தது. இதில் அவரது இதயம் இரண்டு முறை நின்ற பிறகும், டாக்டர்கள் போராடி அவரை மீட்டனர்.
இருப்பினும், அவரது உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி அவரது இரண்டு கைகளையும், ஒரு காலை முழுமையாகவும், மற்றொரு காலை முழங்காலுக்குக் கீழேயும் அகற்ற வேண்டிய கட்டாயம் டாக்டர்களுக்கு ஏற்பட்டது.
‘பர்புரா புல்மினன்ஸ்’ (Purpura Fulminans) என்ற அரிய வகை நோய்த்தொற்றால் அவரது உடல் திசுக்கள் அழுகத் தொடங்கியதே இந்த நிலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண பல் வலி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கனவிலும் நினைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், சிறிய உடல்நலக் குறைபாடுகளைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.
