யுத்தம் ஒரு தேசத்தை மட்டும் அழிப்பதில்லை, அந்த தேசத்து பிஞ்சுக் குழந்தைகளின் மழலை மாறாத கற்பனைத் திறனையும், அவர்களது அழகிய சிறுவயது நினைவுகளையும் சேர்த்தே சிதைத்து விடுகிறது என்பதற்குச் சாட்சியாக காஸாவிலிருந்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
போரும், குண்டுவெடிப்புகளும், மரணங்களும் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்ட சூழலில், அங்கிருக்கும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு கூட பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது.
ஒரு சிறு மரக்கட்டையில் அழுக்கு படிந்த பொம்மை ஒன்றை ஏற்றி வைத்து, அந்தப் பிஞ்சுகள் அதற்கு ‘ஜனாஸா’ (இறுதி ஊர்வலம்) எடுத்துச் செல்லும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
View this post on Instagram
வழக்கமாக பொம்மைகளுடன் பேசிக் கொண்டு, அதற்கு உணவூட்டி விளையாட வேண்டிய வயதில், அந்தப் பொம்மையை தியாகி ஆக்கி அதற்கு இறுதிச்சடங்கு செய்யும் நிலைக்கு அந்தச் சிறுவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தாங்கள் தினமும் கண்ணால் பார்க்கும் காட்சிகளையே அவர்கள் விளையாட்டிலும் பிரதிபலிக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காஸா மட்டுமின்றி, ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 160-க்கும் மேற்பட்ட சிறுமிகள் உயிரிழந்த சம்பவமும் உலகையே உலுக்கியுள்ளது.
போரின் கோரப்பிடியில் சிக்கிச் சிதைந்து வரும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த இந்தக் காட்சிகள், இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
