வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மனிஷா, பெங்களூருவில் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மனிஷாவிற்கும் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இவர்களின் விபரீத உறவை அறிந்த கிருஷ்ணமூர்த்தி மனைவியைக் கண்டித்ததோடு, கடந்த சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து மது அருந்திவிட்டு மனிஷாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனிஷா, தனது கள்ளக்காதலன் அன்பழகனிடம் இது குறித்து முறையிட, இருவரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியைத் தீர்த்துக்கட்ட ஒரு கொடூரத் திட்டத்தைத் தீட்டினர்.

இதனால் திட்டத்தின்படி, அன்பழகன் கொடுத்த தூக்க மாத்திரைகளை மனிஷா தனது கணவர் கிருஷ்ணமூர்த்தியின் உணவில் கலந்து கொடுத்துள்ளார். அவர் மயக்கமடைந்த நிலையில், வீட்டிற்கு வந்த அன்பழகன் மற்றும் அவரது நண்பர் சுப்பிரமணி ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர். பின்னர், தனது கணவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துவிட்டதாக மனிஷா நாடகமாடினார்.

ஆனால், கிருஷ்ணமூர்த்தியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், மனிஷா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த இந்தக் கொலைக் குற்றம் அம்பலமானது. தற்போது மனிஷா, அவரது காதலன் அன்பழகன் மற்றும் கூட்டாளி சுப்பிரமணி ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.