ஈரான் உடனான போர் பதற்றத்தால் முடங்கியுள்ள ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை நடத்த, இந்த வாரம் சர்வதேச அளவிலான தூதரக மாநாட்டை பிரிட்டன் நடத்தவுள்ளது. இதுதொடர்பாக பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையில் கடல்வழி பாதுகாப்பை மீட்டெடுக்க 35 நாடுகள் ஒன்றிணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த மாநாட்டில், கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கவும், அங்கு சிக்கியுள்ள மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான அனைத்து அரசியல் மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து, போர் நிறுத்தப்பட்ட பிறகு அந்தப் பகுதியை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவது குறித்து ராணுவத் திட்டமிடல் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த முயற்சியில் கைகோர்த்துள்ளன. தற்போதைய போர் சூழலால் ஏற்பட்டுள்ள தாக்கம், 1970-களில் நிலவிய எரிசக்தி விலை உயர்வைப் போல ஒரு தலைமுறையையே பாதிக்கும்.
இதற்கிடையில், ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவிற்கு உதவாத நாடுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் (X) தளத்தில், “ஈரான் விவகாரத்தில் தலையிட மறுத்த பிரிட்டன் போன்ற நாடுகள், தங்களுக்குத் தேவையான எரிபொருளை அமெரிக்காவிடம் இருந்து வாங்கிக்கொள்ளட்டும். இல்லையெனில், துணிச்சலுடன் ஹார்முஸ் நீரிணைக்குச் சென்று தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளட்டும். அமெரிக்கா இனி உங்களுக்கு உதவாது; உங்களுக்காக நீங்களே போரிடப் பழகிக்கொள்ளுங்கள்,” எனப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஸ்டார்மர், “அமெரிக்காவும் பிரிட்டனும் நீண்டகாலமாக நெருங்கிய நட்பு நாடுகள். இருப்பினும், என் மீது எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட்டாலும், பிரிட்டனின் தேசிய நலன் சார்ந்தே நான் முடிவெடுப்பேன்,” என உறுதிபடத் தெரிவித்தார்.
ஈரான் தனது கடல் எல்லையில் உள்ள ஹார்முஸ் நீரிணையை முடக்கியுள்ளதால், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் 20 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், உலக அளவில் விலைவாசி உயர்வுக்கும் காரணமாகியுள்ளது.
