கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பல்பொருள் அங்காடி ஊழியர் ஒருவர், கோடை கால பம்பர் லாட்டரி குலுக்கலில் ரூ.10 கோடி முதல் பரிசை வென்று கோடீஸ்வரராக மாறியுள்ளார். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த 51 வயதான பத்மநாபன் என்பவரே இந்த அதிர்ஷ்டசாலி ஆவார்.

மேலும் கோட்டக்கல் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சாதாரண ஊழியராகப் பணியாற்றி வரும் இவர், அவ்வப்போது மட்டுமே லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கம் கொண்டவர். இந்த முறை இவர் வாங்கிய ‘SB 517026’ என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதை அடுத்து, அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த மெகா வெற்றி குறித்துப் பேசிய பத்மநாபன், தான் வழக்கமாக லாட்டரி சீட்டுகள் வாங்குவதில்லை என்றும், பெரிய தொகையிலான பம்பர் லாட்டரிகளை மட்டுமே எப்போதாவது வாங்குவதாகவும் தெரிவித்தார். எதிர்பாராத விதமாகத் தன்னைத் தேடி வந்த இந்த பெரும் அதிர்ஷ்டத்திற்கு இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்நிலையில் கேரளாவில் விற்பனை செய்யப்பட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகளில் பத்மநாபனுக்கு இந்த ஜாக்பாட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரிகள் மற்றும் கமிஷன் போக மீதமுள்ள பெரும் தொகை விரைவில் அவருக்கு வழங்கப்பட உள்ளது.