தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், புதுச்சேரியில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் பெரும்பான்மையான இடங்களில் அனுமதி மறுத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜய், தனது அடுத்தகட்டமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்காக அவரது கட்சி சார்பில் புதுச்சேரியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மொத்தம் 23 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பங்களை ஆய்வு செய்த புதுச்சேரி காவல்துறை, பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு காரணங்களைக் கருத்தில் கொண்டு, கோரப்பட்ட 23 இடங்களில் வெறும் 4 இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள 19 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேரடி பிரசாரத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள நிலையில், தேர்தல் களத்தில் தனது கருத்துக்களைக் கொண்டு சேர்க்க விஜய் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாகத் தெரிகிறது. அனுமதி மறுக்கப்பட்ட இடங்களை ஈடுகட்டும் வகையில், வீட்டிலிருந்தே காணொளி காட்சி  வாயிலாகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே விஜய் உரையாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் இந்த டிஜிட்டல் பிரசார முயற்சி புதுச்சேரி அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.