பீகார் மாநிலம் நாலந்தாவில், மளிகைக் கடைக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மர்ம நபர்கள் வழிமறித்து, ஆடையைக் கிழித்து அரைநிர்வாணமாக்கிச் சித்ரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாலந்தா மாவட்டம் அஜய்பூர் கிராமத்தில் மார்ச் 26-ஆம் தேதி மாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மாலை நேரத்தில் மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டுத் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல், அவரைச் சூழ்ந்து கொண்டு வன்கொடுமையில் ஈடுபட முயன்றுள்ளது.
அச்சிறுவன் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், அவரது ஆடைகளைக் கிழித்து, அவரை அரைநிர்வாணமாக்கித் தாக்கியுள்ளனர். மேலும், அவரைச் சீண்டி அந்த அவமானகரமான செயல்களைத் தங்கள் செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு திரண்டதும், அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தப்பியோடிய அந்த நபர்கள், தாங்கள் எடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார், தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் முக்கியக் குற்றவாளிகளான அசோக் யாதவ் மற்றும் மத்லு மஹதோ (எ) நவ்நீத் குமார் ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ரவிகாந்த் குமார் என்பவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்கத் தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எவரையும் சட்டம் சும்மா விடாது. தலைமறைவாக உள்ள நபரும் விரைவில் கைது செய்யப்படுவார்; அவர் மீது மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என நாலந்தா காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் (X) தெரிவித்துள்ளது.
