பீகார் மாநிலம் நாளந்தா பகுதியில் 20 வயது திருமணமான பெண் ஒருவர், மூன்று உள்ளூர் ரவுடிகளால் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 26-ம் தேதி மாலை, அந்தப் பெண் மளிகைக் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, அசோக் யாதவ், மாத்ரு மஹ்தோ மற்றும் ரவிகாந்த் குமார் ஆகிய மூவர் அவரை வழிமறித்துள்ளனர்.

அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற அந்த கும்பல், அவர் உதவி கேட்டு அலறியும் விடாமல் அவரது ஆடைகளைக் கிழித்து நடுரோட்டில் அரைகுறை ஆடையுடன் விட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு கிராம மக்கள் அங்கு திரண்டதைக் கண்ட குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால், இந்த கொடூரச் செயலை வீடியோ எடுத்த அந்த கும்பல், அதனை இணையதளத்திலும் பரப்பியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து அசோக் யாதவ் மற்றும் மாத்ரு மஹ்தோ ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர்.

தப்பியோடிய மூன்றாவது நபரைத் தேடி வரும் போலீஸார், வீடியோவைப் பரப்பியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிரான இத்தகைய வன்கொடுமைகள் தொடர்வது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.