ஈரானுக்கு எதிரான போருக்கான பிரம்மாண்ட செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு வளைகுடா நாடுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் வலியுறுத்த உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, போரின் முழுச் செலவையும் அமெரிக்கா மட்டும் ஏற்காமல், சவூதி அரேபியா மற்றும் குவைத் போன்ற நட்பு நாடுகளிடமிருந்து நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே 1990-களில் நடந்த வளைகுடாப் போரின்போது, அமெரிக்கா செலவிட்ட தொகையில் பெரும்பகுதியை ஜப்பான் மற்றும் வளைகுடா நாடுகள் வழங்கிய பழைய நடைமுறையை டிரம்ப் இப்போது மீண்டும் கையில் எடுத்துள்ளார்.

அமெரிக்கா ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 340 கோடி ரூபாயை இந்தப் போருக்காகச் செலவிட்டு வருவதால், இந்த நிதிச் சுமையைக் குறைக்க அவர் தீவிரமாக உள்ளார். வளைகுடா நாடுகளின் பாதுகாப்பிற்கு அமெரிக்க ராணுவம் பெரும் அரணாக இருப்பதால், அந்தப் பாதுகாப்பிற்கு ஈடாக இந்த நிதியை அமெரிக்கா கோரவுள்ளது.

ஒருவேளை ஈரான் வீழ்த்தப்பட்டால், அந்தப் பகுதியில் எண்ணெய் வர்த்தகம் மற்றும் கடல்வழிப் போக்குவரத்து சீராகும் என்பதால், அதன் பலனை அடையும் வளைகுடா நாடுகள் இச்செலவை ஏற்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது.

இதுவரை சுமார் 3.22 லட்சம் கோடி ரூபாயை அமெரிக்கா இந்தப் போரில் இழந்துள்ள நிலையில், ‘பாதுகாப்பு வேண்டுமானால் பணம் கொடுங்கள்’ என்ற டிரம்பின் இந்த அதிரடி நிபந்தனை சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.