தேனி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி (30) என்பவருக்கு, சிவகாசி இளைஞருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த பாப்பாத்தி, தனது பெற்றோர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28-ம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு தனது 8 வயது மற்றும் 5 வயதுடைய இரண்டு மகள்களுடன் வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று மாலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள ஒரு கிணற்றில் பாப்பாத்தி மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்கள் பிணமாக மிதந்தன. தகவலறிந்து வந்த போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு, பாப்பாத்தியும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.