திமுக வெளியிட்டுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை குறித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த தேர்தல் அறிக்கை தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாது என்றும், மக்களை ஏமாற்றும் ‘சதுரங்க வேட்டை’ போன்ற வாக்குறுதிகள் தான் இதில் நிறைந்துள்ளன என்றும் அவர் சாடியுள்ளார்.

மேலும், திமுகவின் அறிக்கை இந்த தேர்தலின் கதாநாயகனோ, கதாநாயகியோ அல்ல; மாறாக இது ஒரு வில்லனாகவும், காமெடியனாகவும் தான் இருக்கிறது என்று அவர் கிண்டலடித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 87 சதவீதத்தை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டிய அன்புமணி, தற்போது கொடுத்துள்ள 517 வாக்குறுதிகளில் பல பழைய திட்டங்களே என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி கடந்த முறை ஏமாற்றியது போல, இப்போதும் அதே போன்ற வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை திசை திருப்ப முயல்வதாகவும், இத்தகைய வெற்று வாக்குறுதிகளை தமிழக மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.