பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடரில், பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் எதிரணிக்கும் இடையிலான போட்டியின் கடைசி ஓவரின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. லாகூர் அணியின் நட்சத்திர வீரர் ஃபகார் ஜமான் பந்தை சேதப்படுத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, நடுவர்கள் உடனடியாக லாகூர் அணிக்கு 5 ரன்களை அபராதமாக விதித்தனர். அத்துடன் சம்பந்தப்பட்ட பந்தையும் மாற்றினர்.

போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரமீஸ் ராஜா, லாகூர் அணியின் கேப்டன் ஷாகின் ஷா அப்ரிடியிடம் இது குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பினார். “பந்து சேதப்படுத்தப்பட்டதால் உங்களிடமிருந்து பந்து பறிக்கப்பட்டதே, இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று ரமீஸ் ராஜா நேரடியாகக் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த ஷாகின் அப்ரிடி சற்றே தடுமாறினார். “இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பிறகே என்ன நடந்தது என்பது குறித்துப் பேச முடியும்” என்று கூறி மழுப்பினார்.

தொடர்ந்து பேசிய ஷாகின் அப்ரிடி, “பந்தை மாற்றியதற்கான காரணத்தை நான் நடுவர்களிடம் கேட்டபோது, அவர்கள் என்னைப் பேச விடாமல் தடுத்து, பீல்டிங் செய்யச் சொல்லி அனுப்பிவிட்டனர். எங்களை அவர்கள் நம்பிக்கைக்கு எடுக்கவில்லை” என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், “நான் பந்தை உலர்த்தவோ அல்லது மெருகூட்டவோ முயன்றபோது, சட்டையின் அடிப்பகுதியில் வைத்து தேய்க்க வேண்டாம் என்று மட்டுமே நடுவர்கள் கூறினர். மற்றபடி நான் ஒருபோதும் பந்தை சேதப்படுத்த முயன்றதில்லை. இது குறித்து எனது அணியினருடன் ஆலோசிப்பேன்” என்று ஷாகின் அப்ரிடி விளக்கம் அளித்துள்ளார்.

சர்வதேச அளவில் பாகிஸ்தான் வீரர்களின் ஒழுக்கம் குறித்து ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த ‘பால் டேம்பரிங்’ விவகாரம் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.