இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2026 சீசன் கோலாகலமாகத் தொடங்கியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு சிறுமியின் வீடியோ கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை நெகிழச் செய்துள்ளது. அதாவது பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே தனது பெற்றோருடன் நின்றிருந்த அந்தச் சிறுமி, ஆர்சிபி (RCB) போட்டியைக் காண டிக்கெட் கிடைக்காத விரக்தியில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். “நான் எவ்வளவோ முயற்சி செய்தேன், ஆனால் ஆன்லைனில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன” என்று அந்தச் சிறுமி அழுதுகொண்டே கூறுவது பார்ப்பவர்களைக் கண் கலங்கச் செய்தது.
View this post on Instagram
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள அவிநாஷ் ஹெக்டே என்ற ஆர்சிபி ஆதரவாளர், அந்தச் சிறுமிக்கு ஆறுதல் கூறியுள்ளார். அடுத்த போட்டியை அவர் நேரில் காண நிச்சயம் உதவுவதாக அவிநாஷ் உறுதியளித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையதளவாசிகள் பலரும் அந்தச் சிறுமிக்கு உதவ முன்வந்துள்ளனர். “யாராவது அவருக்கு டிக்கெட் கொடுங்கள்”, “அவருக்கான டிக்கெட்டை நான் வாங்கிக் கொடுக்கிறேன்”, “அழாதே பாப்பா, நீ நிச்சயம் போட்டியைப் பார்ப்பாய்” எனப் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் 28-ம் தேதி நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) நிர்ணயித்த 202-வது ரன் இலக்கை துரத்திய பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலியின் நிதானமான அரைசதமும், தேவ்தத் படிக்கல்லின் அதிரடி ஆட்டமும் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. மேலும் மைதானத்தில் ஆர்சிபி வெற்றியைத் தழுவினாலும், மைதானத்திற்கு வெளியே டிக்கெட் கிடைக்காமல் ஏங்கிய இந்தச் சிறுமியின் அன்புதான் தற்போது இணையத்தின் ‘ஆட்டநாயகனாக’ மாறியுள்ளது.
