திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே விளையாட்டாக நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இடத்தில், 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுநாவலூர் ஊராட்சி எஸ்.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டர் சந்திரசேகரின் மகன் தனுஷிக் (14). துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவன், விடுமுறை நாளான நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான்.
தனுஷிக்கிற்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், உற்சாகமாக கிணற்றின் மேலிருந்து உள்ளே குதித்துள்ளான். ஆனால் எதிர்பாராத விதமாக, கிணற்றின் உட்பகுதியில் இருந்த ஒரு சிமெண்ட் திட்டில் அவனது உடல் பலமாக மோதியுள்ளது.
இதில் நிலைதடுமாறி சுயநினைவை இழந்த மாணவன் தண்ணீருக்குள்ளேயே மூழ்கினான். நீண்ட நேரமாகியும் தனுஷிக் மேலே வராததைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உடனடியாகப் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு நள்ளிரவில் மாணவனின் உடலை மீட்டனர். ஒரே மகனைப் பறி கொடுத்த பெற்றோரின் கதறல் அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்தது.
