தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தனது அதிரடியான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மற்ற கட்சிகளைத் திணறடித்துள்ளது. குறிப்பாக, பெண்களைக் கவரும் வகையில் பல ‘மெகா’ திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள மகளிர் உதவித்தொகை மாதந்தோறும் 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பது மிக முக்கியமான அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இல்லத்தரசிகள் டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வசதியாக 8,000 ரூபாய் மதிப்புள்ள சிறப்பு கூப்பன்கள் வழங்கப்படும் என்ற அதிரடித் திட்டத்தையும் திமுக கையில் எடுத்துள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் மானியம், ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை 1,500 ரூபாயாக உயர்த்துவது எனப் பெண்களுக்கான சலுகைகள் அடுக்கடுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் தொழிற்சாலைப் பகுதிகளில் 1,000 குழந்தை காப்பகங்கள் உருவாக்கப்படும் என்பதும் இந்த தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சமாகும். மொத்தத்தில், இந்த ‘மகளிர் ஸ்பெஷல்’ அறிவிப்புகள் மூலம் திமுக தனது வெற்றியை இப்போதே உறுதி செய்யத் துடிக்கிறது.
