தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இளைஞர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பல்வேறு அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
தமிழக இளைஞர்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் நோக்கில், பி.எச்டி (PhD) படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன் (No Guarantee Loan) வழங்க ஏற்பாடு செய்யப்படும் என விஜய் உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்கள் தடையின்றி உயர்கல்வியைத் தொடர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாதாந்திர உதவித்தொகை குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். டிகிரி முடித்து 29 வயது வரை வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்.
டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும் புதிய கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய், கல்வி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னிறுத்தி இந்த வாக்குறுதிகளை அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்களின் வாக்குகளைக் கவரும் ஒரு முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது.
