மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையே போர் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் தொலைபேசி வாயிலாக முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த உரையாடலின் போது, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இத்தகைய தாக்குதல்களை இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு அந்நாட்டு அரசு அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவிற்குப் பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். உலக அளவில் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டவும் இந்தியா எடுத்து வரும் ராஜதந்திர முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உரையாடல் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் இது குறித்துப் பேசியுள்ள பிரதமர் மோடி, பிராந்திய அமைதிக்காக இந்தியா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.