ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தராயுடு சுகன்யா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மேய்த்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில், சுகன்யாவுக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை கணவர் கண்டித்ததால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சுகன்யா பாறாங்கல்லால் தாக்கியதில் ஹனுமந்தராயுடு உயிரிழந்தார். அவரது உடலை யாருக்கும் தெரியாமல் வீட்டின் பின்புறத்திலேயே சுகன்யா புதைத்துவிட்டார்.
இதை நேரில் பார்த்த அவரது மகள் அம்ருதாவை, வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று சுகன்யா மிரட்டியுள்ளார். இதனால் சிறுமி அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தாய்க்கும் மகளுக்கும் இடையே மோதல் ஏற்பட, சுகன்யா தன் மகளையும் கொல்ல முயன்றுள்ளார்.
அங்கிருந்து தப்பித்து ஊர் மக்களிடம் அம்ருதா உண்மையைச் சொல்ல, சுகன்யா போலீசில் சரணடைந்தார். தற்போது போலீசார் உடலைத் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
