சர்வதேச அளவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு மாதங்களுக்கு பெட்ரோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா அதிரடியாகத் தடை விதித்துள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், தனது உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், எண்ணெய் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையைக் கட்டுப்படுத்தவும் ரஷ்யா இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பு இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றை முன்னிறுத்தியே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவின் இந்த ஏற்றுமதித் தடையானது எரிபொருள் விலையில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே உருவாக்கியுள்ளது.
