அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ இனி ‘டிரம்ப் ஜலசந்தி’ என்று அழைக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறும் இந்த முக்கிய கடல்வழிப் பாதையை, தனது ஆளுமையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் டிரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது வெறும் “போலிச் செய்தி” அல்ல என்று உறுதிபடத் தெரிவித்துள்ள அவர், ஈரானின் அச்சுறுத்தல்களை முறியடித்து உலக நாடுகளின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இப்பாதை தனது பெயரால் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வகிக்கும் இந்த நீரிணை, ஈரானுக்கு 48 மணி நேரக் கெடு விதித்த சில நாட்களிலேயே இத்தகைய பெயர் மாற்ற அறிவிப்பை சந்தித்துள்ளது.
இதனால் ஈரான் இப்பாதையைத் தொடர்ந்து தடுத்து வருவதால், அதற்குப் பதிலடியாகவும் தனது ராணுவ வலிமையை பறைசாற்றவும் டிரம்ப் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். டிரம்பின் இந்த ஆவேசமான பேச்சு ஈரானுடனான மோதலை மேலும் தீவிரமாக்கும் என்றும், இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
