மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையே ஒரு மாத காலமாக நீடித்து வரும் போர், உலக நாடுகளைப் பெரும் பொருளாதார நெருக்கடியில் தள்ளி வரும் வேளையில், தற்போது ஒரு நம்பிக்கையூட்டும் நற்செய்தி வெளியாகியுள்ளது.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் பேசிய அமெரிக்கப் பிரதிநிதி மார்கோ ரூபியோ, இந்தப் போர் இனி மாதக்கணக்கில் நீடிக்காது என்றும், இன்னும் சில வாரங்களிலேயே முடிவுக்கு வரும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தனது இலக்குகளை முன்கூட்டியே எட்டி வருவதால், தரைப்படை வீரர்களைப் போர்க்களத்தில் இறக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்தத் துல்லியமான அறிவிப்பு சர்வதேசச் சந்தையில் நிலவிய பதற்றத்தைச் சற்றுத் தணித்துள்ளது.

இருப்பினும், ஈரானைப் பொறுத்தவரை அமெரிக்காவின் இந்த வாக்குறுதிகளை நம்பத் தயாராக இல்லை. போரினால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 கடுமையான நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது.

எகிப்து நாடு இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வரும் வேளையில், ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே நிரந்தர அமைதி சாத்தியமாகும் எனக் கருதப்படுகிறது. கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலால் பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், வாரங்களிலேயே போர் முடியும் என்ற அமெரிக்காவின் சமிக்ஞை இந்தியாவிற்கும் ஒரு மிகப்பெரிய ஆறுதலாகப் பார்க்கப்படுகிறது.