சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில், மனிதக் கையைப் போன்ற வியக்கத்தக்க வடிவில் விளைந்துள்ள சேனைக்கிழங்கு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவசாயி தனது நிலத்தில் விளைச்சலை அறுவடை செய்தபோது, மண்ணுக்குள் மனித கை போன்ற ஒரு உருவம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் முதலில் அது ஒரு மனித உடல் உறுப்பாக இருக்குமோ என்று அஞ்சிய அவர், பின்னர் அதை முழுமையாகத் தோண்டி எடுத்தபோதுதான் அது ஐந்து விரல்களுடன் கூடிய விசித்திரமான சேனைக்கிழங்கு என்பதை உணர்ந்தார். அந்த கிழங்கின் விரல் நுனிகள் நகங்களைப் போன்ற அமைப்பைக் கொண்டிருந்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இந்த அபூர்வமான சேனைக்கிழங்கைப் பற்றிய செய்தி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் இதனை நேரில் காண விவசாயியின் வீட்டில் குவிந்தனர்.

இந்த அரிய வடிவத்திலான கிழங்கை ஒரு நபர் சுமார் 13 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்க முன்வந்தபோதிலும், அந்த விவசாயி அதனை விற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இயற்கையின் இந்த விசித்திரமான படைப்பு மற்றும் விவசாயியின் முடிவு குறித்து தற்போது இணையதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.