கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேர்க்கிளம்பியை அடுத்த கல்லன்குழி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஜாஸ்பர் சுபின் என்ற பெயிண்டர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அஸ்வினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அஸ்வினி தனது கணவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான ஜாஸ்பர் சுபின், உறவினர்கள் தேற்றியும் மீள முடியாமல் தவித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது அறையில் தூங்கச் சென்ற அவர், நள்ளிரவில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் அவரது தாய் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.