மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தங்களுக்கு நெருக்கமான நாடான சீனாவின் சரக்குக் கப்பல்களையே ஈரான் திருப்பி அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மிகப்பெரிய சிப்பிங் நிறுவனமான கோஸ்கோவுக்குச் சொந்தமான இரண்டு பிரம்மாண்ட சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க முயன்றபோது, பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாததால் அவை பாதியிலேயே யு-டர்ன் எடுத்துத் திரும்பின.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய அல்லது அவற்றின் ஆதரவு நாடுகளுக்குச் செல்லும் எந்தவொரு கப்பலும் இந்த கடல் வழியாகச் செல்ல அனுமதி இல்லை என்று ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

மறுபுறம், ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் கூறினாலும், ஈரான் தனது நிபந்தனைகளில் உறுதியாக உள்ளதுடன், அமெரிக்க ராணுவ முகாம்களுக்கு அருகில் இருக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குவைத் போன்ற அண்டை நாடுகளின் வணிகத் துறைமுகங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், மத்திய கிழக்கில் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.