ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஐபிஎல் தொடங்கப்பட்ட 18 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்த சீசனில் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கமாக வெளிநாட்டு வீரர்களுக்குக் கேப்டன் பதவி வழங்கும் அணிகள்கூட, இந்த முறை இந்திய வீரர்களின் தலைமைத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட் கம்மின்ஸ் காயத்தால் விலகியதால் இஷான் கிஷான் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல், ஆர்சிபி அணியை கடந்த முறை கோப்பை வெல்ல வைத்த ரஜத் படிதார் தொடர்ந்து கேப்டனாகச் செயல்படுகிறார்.
இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில் ஆகியோர் கேப்டன்களாக உள்ளனர்.
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.
மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியான் பராக், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அக்சர் படேல், மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அஜின்க்யா ரஹானே ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
வெளிநாட்டு வீரர்களின் ஆதிக்கம் குறைந்து, இந்திய வீரர்களின் கையில் மொத்த அதிகாரமும் வந்துள்ளதால் இந்த ஐபிஎல் சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
