ஐபிஎல் 2026 தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கடந்த சீசனில் 14 வயதிலேயே அறிமுகமாகி உலகத்தையே அதிரவைத்த இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் களம் கண்ட வைபவ், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியிலேயே வெறும் 35 பந்துகளில் அதிரடி சதம் விளாசி சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் அவர் ஆடிய ஆட்டம், ஆப்கானிஸ்தான் வீரரான கரீம் ஜனத்தின் ஐபிஎல் கனவையே சிதைத்துவிட்டது
என்றுதான் சொல்ல வேண்டும். கரீம் ஜனத் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் உட்பட 30 ரன்களைக் குவித்து வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம் ஆடியது, அந்த ஆப்கான் பந்துவீச்சாளருக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது.
அறிமுகப் போட்டியிலேயே வைபவ் கொடுத்த இந்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட் காரணமாக, ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற தேவையற்ற சாதனையை கரீம் ஜனத் தன்வசமாக்கினார். அந்தப் போட்டிக்குப் பிறகு அவருக்கு மீண்டும் பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுடன், ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய அந்த ஒரே போட்டியே அவரது கடைசிப் போட்டியாகவும் மாறியது.
ஆப்கானிஸ்தான் தேசிய அணிக்காக 75 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட ஆல்-ரவுண்டரான கரீம் ஜனத், 14 வயது சிறுவன் வைபவ்விடம் சிக்கித் தனது ஐபிஎல் பயணத்தை முடித்துக்கொண்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே இப்போதும் ஒரு ‘பகீர்’ கதையாகப் பேசப்படுகிறது.
வரவிருக்கும் 2026 சீசனிலும் வைபவ் இதுபோன்று யாருடைய விக்கெட்டை அல்லது கேரியரை காலி செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
