அசாம் மாநிலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால், பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப அதிக அளவில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக ஜோர்ஹட் போன்ற பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காண முடிகிறது.
மேலும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்த செய்திகளும் மக்களிடையே இத்தகைய பீதியை ஏற்படுத்தியுள்ளன. பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போதிய இருப்பு உள்ளதாகக் கூறினாலும், வதந்திகளால் தூண்டப்பட்ட மக்கள் முண்டியடித்துக்கொண்டு எரிபொருளைச் சேமிக்க முயன்று வருகின்றனர்.
இதனால் மக்களின் இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாகவும், சுத்திகரிப்பு நிலையங்கள் தடையின்றி இயங்கி வருவதாகவும் பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல இயங்கி வருவதால், பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாக வேண்டாம் என்று அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
