2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ளார். சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் கூட்டணிக் கட்சியான பாஜக வேட்பாளரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது உரையாற்றிய அவர், வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, சுமார் 210 தொகுதிகளில் வெற்றி கண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மேலும் திமுக அரசு கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், குறிப்பாக நீட் தேர்வு விலக்கு மற்றும் கல்விக்கடன் ரத்து போன்ற விவகாரங்களில் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் திமுக கூட்டணி இன்னும் தொகுதிப் பங்கீட்டை முழுமையாக முடிக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுத் தேர்தல் களத்தில் முன்னிலையில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். தமிழகத்தில் நிலவும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய கூறியுள்ளார்.
இதனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். சாதாரண மக்களின் உணர்வுகளைப் புரிந்த ஒரு அரசாக அதிமுக மீண்டும் மலரும் என்றும், திமுகவின் “வாரிசு அரசியல்” மற்றும் “அதிகார மையங்களுக்கு” மக்கள் இந்தத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
