நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கென தனியாகவும், பிற்படுத்தப்பட்ட சமூகக் குழந்தைகளுக்கென தனியாகவும் இரண்டு வெவ்வேறு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே ஊராட்சியில் குழந்தைப் பருவத்திலேயே சாதிய பாகுபாட்டைத் திணிக்கும் வகையில் இந்த மையங்கள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவது சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக அரசின் நிர்வாகத் திறமையின்மை மீது பலத்த கேள்விகள் எழுந்துள்ளன.

​இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவின் அண்ணாமலை, “தமிழக அரசின் சமத்துவக் கொள்கைக்கு இது ஒரு மிகப்பெரிய அவமானச் சின்னம்” என்று சாடியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக இந்தச் சாதியப் பாகுபாட்டைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அரசின் முழுமையான தோல்வியையே காட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குழந்தைகளிடம் சமத்துவத்தைப் போதிக்க வேண்டிய அங்கன்வாடி மையங்களே இப்படிப் பிரிந்து கிடப்பது, திராவிட மாடல் ஆட்சியில் நிலவும் சமூக நீதிக்கு விடப்பட்ட சவால் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.