தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வைக்க பாஜக மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

நடப்பு சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை ஏற்கனவே டெல்லி தலைமைக்கு கடிதம் எழுதியதாகத் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், தமிழகத்தில் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க அவர் போட்டியிட வேண்டியது அவசியம் என்று டெல்லி தலைமை கருதுகிறது. இன்று காலை பாஜக தலைமை அலுவலகத்தில் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜகவின் செல்வாக்கு அதிகம் உள்ள மாவட்டங்களில் சில முக்கிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணாமலைக்காக பின்வரும் தொகுதிகள் முதற்கட்டப் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது:

கோவை வடக்கு: தற்போது இத்தொகுதியில் வானதி சீனிவாசன் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், அண்ணாமலையை இங்கு களமிறக்கினால் வெற்றி உறுதி என பாஜக மேலிடம் கருதுகிறது.

திருப்பூர் தெற்கு: கொங்கு மண்டலத்தின் முக்கியத் தொகுதியான இதிலும் அண்ணாமலைக்கு சாதகமான சூழல் நிலவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மொடக்குறிச்சி: இத்தொகுதியிலும் அண்ணாமலையை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழக பாஜக நிர்வாகிகளிடம் டெல்லி தலைமை கருத்து கேட்டுள்ளது.

மேபாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அண்ணாமலை எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் அல்லது மேலிடத்தின் அறிவுறுத்தலை ஏற்று தேர்தல் களத்தில் குதிப்பாரா என்பது தொண்டர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.